மேற்கு கரையில் இஸ்ரேலின் நடவடிக்கை; நெதன்யாகுவிடம் மோடி பேச வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

1967-க்கு பிறகு மேற்கு கரையில் நிலப்பதிவு நடவடிக்கையை இஸ்ரேல் முதல்முறையாக மேற்கொள்கிறது.
மேற்கு கரையில் இஸ்ரேலின் நடவடிக்கை; நெதன்யாகுவிடம் மோடி பேச வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

பாலஸ்தீனத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூத குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், இஸ்ரேல் அரசு அங்குள்ள நிலங்களை முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1967 மத்திய கிழக்கு போருக்குப் பிறகு, மேற்கு கரையில் இத்தகைய நிலப்பதிவு நடவடிக்கையை இஸ்ரேல் முதல்முறையாக மேற்கொள்கிறது.

இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீன நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கு கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நெதன்யாகுவிடம் பேசி இந்தியாவின் கவலையை தெரிவிக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பிப்ரவரி 17, 2026 செவ்வாய்க்கிழமை அன்று, 85 நாடுகள் ஐ.நா.வில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அந்த அறிக்கையில், இஸ்ரேலின் தொடர்ச்சியான ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1988 நவம்பர் 18 அன்று பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தபோதிலும், இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்த 85 நாடுகளின் பட்டியலில் சேர இந்தியாவுக்கு 24 மணிநேரம் ஆனது.

பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடக்கத்தில் இஸ்ரேலுக்குச் செல்வதால், அவர் தனது நல்ல நண்பர் நெதன்யாகுவிடம் பேசி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நிலப்பதிவு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் கவலையை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com