பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் - இஸ்ரோ தலைவர் திடுக்கிடும் தகவல்


பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் -  இஸ்ரோ தலைவர் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2024 9:21 AM GMT (Updated: 25 Aug 2024 11:29 AM GMT)

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய நாசா ஆய்வை நடத்தி வருகிறது.

பெங்களூரு,

பறக்கும் தட்டுககளில் வேற்று கிரகவாசிகள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல ஹாலிவுட் படங்களில் பார்த்து இருக்கிறோம். மேலும் வேற்று கிரகவாசிகள் குறித்து அவ்வப்போது வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் மேலை நாடுகளில் சிலர் வேற்று கிரகவாசிகளை பார்தததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய ஒருபக்கம் ஆய்வை நடத்தி கொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேற்றுகிரக வாசிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது,பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயமாக உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம். 100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இத்தகைய மைக்ரோபோன். கேமரா, லைட் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள். தொலைகாட்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இவை அனைத்தையும் நாம் 100 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்.

அந்த வகையில் இதே போன்ற நாகரீகம் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள். அவைகள் நம்மை விட 1000 ஆண்டுகள் முன்னேறி இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெறும் 100 ஆண்டுகளில் நாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற முடியும் என்றால், அடுத்த 100 ஆண்டுகளில் நம் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். நம்மை விட 1000 ஆண்டுகள் முன்தோன்றி இருக்கும் வேற்றுகிரக வாசிகள் எத்தகைய வளர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். அவர்கள் நிச்சயம் இங்கு இருக்க வேண்டும். நம்மை விட 10000 மடங்கு வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பம் கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நிச்சயம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்.


Next Story