

புதுடெல்லி,
சுற்றுலாவை மேம்படுத்தவும். இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரிய மற்றும் கலாசார தலங்களை கண்காணித்து பாதுகாப்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'புவன்' என்ற பெயரில் புவி இடம் சார்ந்த இணையதளம் மற்றும் செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் 2 தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
பார்வையாளர்கள், 'ஸ்பேஷியல்' டெக்னாலஜிஸ் (கஸ்தூரி) மற்றும் பாரத் தர்ஷன் செயலிகள் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அறிவுத்தளத்தை அணுகலாம். தேசிய தொலை உணர்வு மையம், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், கலாசார அமைச்சகம் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால், பல்வேறு மாநில அரசு இணையதளங்கள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தொடர்புடைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களை பயன்படுத்தி இந்தச் செயலிகள் உருவாக்கப்பட்டன.
தற்போது, 'பாரத் தர்ஷன்' செயலியானது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட 42 இடங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது. அதே நேரத்தில் கஸ்தூரி செயலியானது 20 கலாசார மற்றும் பாரம்பரிய நிலப்பரப்புகள் குறித்த விவரங்களை கொண்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல தளங்கள் சேர்க்கப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.