இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள்... விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ.
இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள்... விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளனர்.

சமீப காலமாக, 1,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இஸ்ரோவின் மொத்த பணியாளர்களில் 25 சதவீதமாகும்.

தனியார்மயம்

விண்வெளி துறையில் விதிகளை மாற்றி தனியாரும் விண்வெளி திட்டங்களில் பங்கேற்கலாம் என்று கடந்த 2020ம் ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட 400 நிறுவனங்கள், விண்வெளி ஆய்வில் இணைந்துள்ளன.

இந்நிறுவனங்கள் மிக வேகமாக, ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் கட்டமைப்பு, உந்துவிசை செயல்பாடுகளில் வளர்ந்து வருகின்றன. இவற்றுக்கு மிகவும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை.

எனவே, பணி ஏற்ற உடனேயே மிகப்பெரிய திட்டங்களுக்கு, தலைமை ஏற்கும் பொறுப்பு, பல மடங்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன்வருகின்றன. இதனால், தன்னிச்சையாக சாதிக்க துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், இஸ்ரோவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளில் சிலர், தனியார் விண்வெளி நிறுவனங்களின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர்.

ஊழியர்கள் வெளியேறியதால், இஸ்ரோவின் இந்தாண்டு திட்டங்கள் தாமதமாகி உள்ளன. 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் 7 விண்கலங்கள், 6 செயற்கைக்கோள்களை, இறுதி செய்யும் கட்டாயத்தில் இஸ்ரோ உள்ளது. மேலும், குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடப்பதால், சிறிய ரக ஏவுதல்களை அங்கிருந்து நடத்தும் ஆய்வுகளும் நடக்கின்றன. அந்த பணிகள் பாதிக்காமல் இருக்க விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com