

புதுடெல்லி,
விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திரசிங் நேற்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில், சந்திரயான்-2 விண்கலத்தை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சோதனைகள் நடந்து வருகிறது. சிறப்பு சோதனைகளை இந்த ஆண்டின் மத்தியில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சோதனைகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படலாம் என தெரிகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை திட்டமிடவில்லை. என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பல விண்வெளி திட்டப்பணிகள், கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டன. அவற்றில், விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் முதலாவது திட்டமான ககன்யானும், நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்புவதும் அடங்கும். கடந்த ஆண்டு இறுதியில் ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான்-3 திட்டம் கொரோனாவின் தாக்கம் காரணமாக தள்ளிப்போய்விட்டது குறிப்பிடத்தக்கது.