

புதுடெல்லி:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பும்ரா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அன்ஷுல் கம்போஜ் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறுகையில், சிறப்பாக விளையாடியும் முகமது சிராஜுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது பெயர் 'சிராஜ்' என்பதால்தான் அவர் தேர்வு செய்யப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது பாகுபாட்டைக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பதிலடி கொடுத்துள்ளார். கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்விலும் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக அவர் விமர்சித்தார்.மேலும், ஜடேஜாவும் அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் நாட்டுக்காகவே விளையாடுகின்றனர். கிரிக்கெட்டை மதம் மற்றும் அரசியல் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிராஜ் அணியில் இடம்பெறாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்டோரும் விமர்சித்து இருந்தனர். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், அணியின் வீரர்கள் சேர்க்கை குறித்து கடந்த ஒரு வாரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. சிறப்பாகச் செயல்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் சிலரைத் தேர்வு செய்யாமல் இருப்பது கடினமான முடிவாக இருந்தது”என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில், “முகமது சிராஜிடம் எந்தக் குறையும் இல்லை. அணியைத் தேர்வு செய்தபோது இதுவே சிறந்த ஆடும் லெவன் எனக் கருதினோம். சிராஜை நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை. போட்டியின் முதல் நாளை மட்டும் கருத்தில் கொண்டு அணியைத் தேர்வு செய்யவில்லை. 2, 3, 4-வது நாட்களையும், 5 நாட்கள் நடைபெறும் முழுப் போட்டியையும் கருத்தில் கொண்டே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.