ஐ.டி. நிறுவன அதிபர் உள்பட 2 பேர் படுகொலை- 2 பேர் கைது

பெங்களூருவில், ஐ.டி. நிறுவன அதிபர் உள்பட 2 பேரை கொன்ற வழக்கில் முன்னாள் ஊழியர், கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் 6 மாதமாக திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
ஐ.டி. நிறுவன அதிபர் உள்பட 2 பேர் படுகொலை- 2 பேர் கைது
Published on

பெங்களூரு:-

வெட்டி கொலை

பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் ஏரோனிக்ஸ் என்ற ஐ.டி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிபர் பனிந்திரா சுப்பிரமணியா (வயது 26) ஆவார். இந்த நிறுவனத்தில் விணுகுமார் (40) என்பவர் செயல் அதிகாரியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர்களது நிறுவனத்திற்குள் புகுந்த மர்மகும்பல் 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏரோனிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சபரீஸ் என்ற ஜோக்கர் பெலிக்ஸ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பனிந்திரா சுப்பிரமணியா, விணுகுமாரை கொலை செய்தது தெரிந்தது. அதாவது பனிந்திரா சுப்பிரமணியா ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

குனிகலில் கைது

பின்னா அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிய அவர், தனியாக ஐ.டி. நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அதில் விணுகுமாரை செயல் அதிகாரியாக பனிந்திரா சுப்பிரமணியா நியமித்தார். இந்த நிறுவனத்தில் சபரீஸ் என்ற ஜோக்கர் பெலிக்சும் வேலை செய்தார். இதற்கிடையே பனிந்திரா, பெலிக்சை பணிநீக்கம் செய்தார். வேலையை இழந்த ஆத்திரத்தில் இருந்த பெலிக்ஸ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஐ.டி. நிறுவனத்துக்குள் புகுந்து பனிந்திராவையும், விணுகுமாரையும் கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக அவர்களை தேடி வந்தனர். அப்போது பெலிக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலையை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து கார் மூலம் சிட்டி ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து துமகூரு மாவட்டம் குனிகலுக்கு ரெயிலில் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் குனிகல் விரைந்தனர். அவர்கள் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொலையாளிகளான பெலிக்ஸ், வினய் ரெட்டி (23), சந்தோஷ் (25) ஆகியோர் என்பது தெரிந்தது.

6 மாதங்களாக திட்டம்

இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடந்த 6 மாதங்களாக பனிந்திரா மற்றும் விணுகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததும், தைரியம் இன்றி அவர்கள் கொலை முயற்சியை தள்ளி வைத்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் மது குடித்துவிட்டு, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வேலை கேட்டு அந்த நிறுவனத்திற்கு சென்றனர்.பின்னர் அவர்கள் பனிந்திராவுடன் சுமார் 40 நிமிடங்கள் பேசி உள்ளனர். அப்போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பனிந்திராவை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், விணுகுமாரையும் அவர்கள் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

ஏமாற்றுக்காரர்களை...

மேலும் ஜோக்கர் பெலிக்ஸ் பற்றி பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது. அதாவது, 'டிக்டாக்'கால் பிரபலமடைந்த ஜோக்கர் பெலிக்ஸ், தன்னை ஒரு கன்னட ராப்பர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, ராப் பாடல்கள் பாடுவது போன்ற சில வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'joker_felix_rapper' என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும், 'ஜே.எப். மீடியா' என்ற யூ-டியூப் சேனலும் ஜோக்கர் பெலிக்சுக்கு உள்ளது. அதில் அவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

சம்பவம் நடைபெறுவதற்கு ஏறக்குறைய 9 மணி நேரத்திற்கு முன்பு ஜோக்கர் பெலிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "இந்த கிரக மக்கள் அனைவரும் முகஸ்துதி பாடுபவர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கின்றனர். அதனால் நான் இந்த கிரக மக்களை காயப்படுத்துகிறேன். நான் கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துகிறேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தவில்லை" என பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ்

பனிந்திரா மற்றும் விணுகுமாரை கொலை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலை நடந்த செய்தியை அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டசாக பதிவிட்டுள்ளார். அன்று இரவு 10 மணி வரை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.

இதற்கிடையே பனிந்திரா சுப்பிரமணியா வேலை பார்த்து வந்த பழைய நிறுவனத்தின் உரிமையாளர் அருணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com