

புதுடெல்லி,
அரியானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக குல்தீப் பிஷ்னோய் இருந்து வருகிறார். இவர் அரியானா முன்னாள் முதல் மந்திரி பஜன் லாலின் மகனாவார். இவர் மீது வருமான வரி துறையினர் வரி ஏய்ப்பு வுழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, கடந்த ஜூலை 23ந்தேதி அரியானா, டெல்லி மற்றும் இமாசல பிரதேசத்தில் உள்ள குல்தீப்பின் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், பிரைட் ஸ்டார் ஓட்டல் தனியார் நிறுவனம் என்ற பெயரில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்று நடத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்நிறுவனத்தின் 34 சதவீத பங்குகள் பிரிட்டிஷ் விர்ஜின் தீவு பகுதியில் பதிவு செய்யப்பட்ட துணை நிறுவனமொன்றின் பெயரில் இருந்தன. இந்த துணை நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்த ஓட்டலின் மதிப்பு ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. குல்தீப் மற்றும் அவரது சகோதரர் சந்தர் மோகனின் பினாமி சொத்துகளாக இவை உள்ளன. மோகன், முன்னாள் அரியானா துணை முதல் மந்திரியாக பதவி வகித்தவர்.
இந்த நிலையில், பினாமி சொத்து பரிமாற்றங்கள் சட்டம், 1988ன் பிரிவு 24(3)ன் கீழ் இந்த ஓட்டலை முடக்கும்படி டெல்லியை சேர்ந்த வருமான வரி துறையின் பினாமி ஒழிப்பு பிரிவு உத்தரவிட்டது.
இதன்படி குல்தீப் பிஷ்னோயின் ரூ.150 கோடி மதிப்பிலான ஓட்டலை வருமான வரி துறை முடக்கியுள்ளது.