

புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
அதன்படி தமிழகத்தில் தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் பெரிய நடிகர்களின் படம் எதுவும் வெளியாகாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் ரசிகர்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய், நடிகர் சிம்பு ஆகியோரின் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. மேலும் இது தொடர்பாக நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார்.
இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மத்தியில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை தமிழக அரசு அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் திரையரங்குகளில் 50 சதவீதம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.