சித்தராமையா கார் மீது முட்டை வீசியது சரியல்ல; குமாரசாமி பேட்டி

சித்தராமையா கார் மீது முட்டை வீசியது சரியல்ல என்று குமாரசாமி கூறியுள்ளார்.
சித்தராமையா கார் மீது முட்டை வீசியது சரியல்ல; குமாரசாமி பேட்டி
Published on

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திசை திருப்புகிறார்கள்

சித்தராமையா கார் மீது முட்டை வீசியது சரியல்ல. இதை யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. இதனால் எதையும் சாதிக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணா கொள்கையின்படி நாம் மாநிலத்தை வழிநடத்த வேண்டும். தன் கார் மீது முட்டை வீசியதற்கு பதிலடியாக காங்கிரசரும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்கள் என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது.

மக்களின் நலனுக்கான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தவில்லை. இதுபோன்ற உணர்வு ரீதியிலான பிரச்சினைகளை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். வீரசாவர்க்கர் விவகாரம் நான் பிறப்பதற்கே முன்பு நடந்துள்ளது. அதுகுறித்து பலர் புத்தகங்களில் எழுதியுள்ளனர். இந்த விஷயத்தை முன்வைத்து அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.

தியாகம் செய்தவர்கள்

கொலை செய்தவர்களின் படத்தை வைத்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்கள். நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் பற்றி பேசுவது இல்லை. பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு புதிய பதவி கொடுத்துள்ளனர். இதனால் தென்இந்தியாவில் கட்சி பலம் பெறும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். முதலில் கர்நாடகத்தில் ஆட்சியை அவர்கள் தக்க வைத்து கொள்ளட்டும். கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதால் உயர்நிலை குழுவில் எடியூரப்பாவுக்கு இடம் வழங்கியுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு வேறு மாநில தேர்தல் நடைபெற்றால், எடியூரப்பாவை கைவிட்டு அந்த மாநில தலைவர்களை சேர்த்து கொள்வார்கள். அதனால் எடியூரப்பாவுக்கு பதவி வழங்கியதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com