‘காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனியாக சந்திப்பது சரியல்ல’ எடப்பாடி பழனிசாமி கருத்து

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனியாக சந்திப்பது சரியாக இருக்காது என டெல்லியில் நடந்த முதல்-மந்திரிகள் கூட்டத்துக்குப்பின் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனியாக சந்திப்பது சரியல்ல’ எடப்பாடி பழனிசாமி கருத்து
Published on

புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இந்த கூட்டம் முடிந்தபின் அவர் டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து முதல்-அமைச்சர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது தமிழகம் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

குறிப்பாக தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி, ஆண்டுதோறும் ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தை, மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அந்த பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனை மற்றும் சித்தாந்த படிப்புகளுக்கு ஒரு உயர் மேம்பட்ட மையத்தை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

இதைப்போல மகாத்மா காந்தியின் நிலையான வளர்ச்சி குறித்த கொள்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் நோபல் பரிசு போல காந்தி பசுமைப்புவி விருது என்ற விருதை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.

நான் பங்கேற்றது, மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம். அது தொடர்பான கருத்துகளையே கூட்டத்தில் கேட்டனர். ஆனால் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்கனவே பிரதமர் அனுப்பச் சொன்னார். அதை அனுப்பி இருக்கிறோம்.

காவிரி விவகாரம் பற்றி ஏற்கனவே முழு விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. அது அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்து விட்டது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், அனைத்து விவசாய சங்க தலைவர்களை அழைத்து தீர்மானம் நிறைவேற்றி பிரதமரிடம் அளித்தோம். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுக்கொண்டோம். ஆனால் பிரதமரை சந்திப் பது தொடர்பாக கடிதம் வரவில்லை.

பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த கடிதத்தில் நீர்வளத்துறை மந்திரியை முதலில் சந்தித்து பேசுங்கள் என்று குறிப்பிட்டனர். உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து கேட்டோம். அவர், மத்திய அரசு தட்டிக்கழிக்கப்பார்க்கிறது. நாம் மத்திய மந்திரியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் எப்போது அழைக்கிறாரோ அப்போது அவரை சந்திப்போம் என கூறினார். எனவே காவிரி தொடர்பாக பிரதமரை நான் தனியாக சந்திப்பது சரியாக இருக்காது.

அது மட்டுமல்ல, ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் வந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்க வேண்டும் என்று விழா மேடையிலேயே வலியுறுத்தினேன்.

அதன்பிறகு ராணுவ கண்காட்சிக்கு வருகை தந்தபோதும் நானும், துணை முதல்- அமைச்சரும் அவரிடம் காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினோம். அனைத்துக்கட்சிக்குழு எழுதிய கடிதத்தையும் வழங்கினோம். ஆகவே, தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com