டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு - பா.ஜனதாவில் சேருவாரா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இதனால் அவர் பா.ஜ.க.வில் சேருகிறாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு - பா.ஜனதாவில் சேருவாரா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Published on

புதுடெல்லி,

சீன அதிபர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, விமானநிலையத்தில் அவரை வரவேற்க த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வந்திருந்தார். அப்போது, ஜி.கே.வாசனிடம் கை குலுக்கிய மோடி, கடந்த முறை நீங்கள் வீட்டிற்கு வருவதாக சொன்னீர்களே, வரவில்லையே? கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜி.கே.வாசனும் சிரித்தபடியே வருவதாக புன்னகைத்தார்.

பிரதமர் மோடியின் அந்த அன்பான விசாரிப்புதான் பா.ஜ.க.வுடன் த.மா.கா. இணையபோகிறது என்ற பரபரப்பு தீயையும் பற்ற வைத்தது. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. தலைவர் பதவி வெற்றிடமாக தொடர்ந்து வரும் நிலையில், அந்த வெற்றிடத்திற்கு ஜி.கே.வாசனை கொண்டு வரும் முயற்சியே இது என்று சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில் திடீரென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

த.மா.கா.வை கலைத்து விட்டு, பா.ஜ.க.வில் ஜி.கே.வாசன் இணையபோகிறார் என்ற யூகத்திற்கு இந்த சந்திப்பு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது.

பிரதமர் மோடியை சுமார் மணிநேரத்திற்கு மேலாக ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு முடிந்த பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி நாட்டை சிறப்பாக வழி நடத்துகிறார். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் முதல் முறையாக மோடியை சந்தித்து பேசினேன். அவரது இல்ல அலுவலகத்தில் சந்தித்தேன். இந்த சந்திப்பின் நோக்கம் மரியாதை நிமித்தமானது. இருந்தாலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி குறித்து விவரமாக மோடியிடம் எடுத்து கூறினேன்.

கல்வி, விவசாயம், தொழில், தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினேன். நான் கூறிய கருத்துக்களை அவர் பொறுமையாக கேட்டார். அவர் என்னிடம் சில சந்தேகங்களை கேட்டார். நான் அதற்கு பதில் அளித்தேன். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறது என்று கூறினேன். தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மத்திய, மாநில அரசுகள் மீதும், கூட்டணி மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதை அவரிடம் நான் தெரிவித்து இருக்கிறேன்.

அமித்ஷாவையும் சந்தித்து பேச விரும்புகிறேன். ஆனால் இப்போது இல்லை. அவருக்கு மராட்டியத்தில் வேலை இருக்கிறது. அவரை நான் சந்திப்பதற்கான அவசரம் இப்போது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வுடன், த.மா.கா.வை நீங்கள் இணைக்க இருக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து ஜி.கே.வாசன் கூறியதாவது:-

த.மா.கா. தமிழக அரசியலில் தனித்தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது, தமிழக மக்கள் விரும்பும் கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். உள்ளாட்சியில் அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்துவோம். சட்டமன்றத்தில் வெற்றிகளை குவிப்போம். பாரதீய ஜனதா கட்சியுடன் த.மா.கா. இணையும் என்பது வதந்தி. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com