

புதுடெல்லி,
படித்தவர்களே டிஜிட்டல் கைதை நம்பி ஏமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
'டிஜிட்டல் கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்' என்ற தலைப்பில் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யாபக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் நப்பினை, “டிஜிட்டல் கைதை தடுக்க எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் இன்னும் பிரச்சினை நீடிக்கிறது. கடந்த வாரம் ஒரு பெண் டிஜிட்டல் கைதால் ரூ.2 கோடியே 50 லட்சம் இழந்துள்ளார்” என்று கூறினார்.
அதைக்கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் வாய்மொழியாக சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஒரு அடிப்படை விஷயம் எங்களுக்கு புரியவில்லை. செல்போனில் என்ன கைது பயம் வேண்டிக் கிடக்கிறது?. செல்போனை சுவற்றின் மீது எறியுங்கள். கைது எப்படி நடக்கும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? அவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது. அது கடவுளுக்குத்தான் தெரியும். நீங்களே உங்களை சிக்க வைத்துக் கொள்கிறீர்கள்.
எத்தனையோ விழிப்புணர்வு பிரசாரம், பத்திரிகை செய்தி, கோர்ட்டு உத்தரவு என இருந்தும், படித்தவர்கள் கூட டிஜிட்டல் கைதை நம்பி ஏமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது. செல்போனில் டிஜிட்டல் கைது செய்ய முடியும் என்று நினைத்தால், ஜனநாயக நாட்டில் நீங்கள் என்ன மாதிரி மனிதர்?
இந்த வயதில் நீங்கள் டிஜிட்டல் கைதில் சிக்கினால், அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?. டிஜிட்டல் கைது உத்தரவு இருக்கிறதா என்று கோர்ட்டு இணையதளத்துக்கு சென்று கூட சரிபார்க்கலாம்.
ஏமாற வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பாதுகாப்பு குடையாக செயல்பட வேண்டும். வங்கிகளின் கவனக்குறைவால் டிஜிட்டல் கைதில் ஒருவர் ஏமாந்தது தெரிய வந்தால், அவர் இழந்த தொகைக்கு சமமான தொகையை இழப்பீடாக வங்கி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது பற்றி பரிசீலித்து வருகிறோம். அத்துடன் வங்கிகள் சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி கூறியதாவது:
கோர்ட்டு தலையீட்டுக்கு பிறகு டிஜிட்டல் கைதுகள் 50 சதவீதம் குறைந்துவிட்டன. சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கின்றன. இதுதொடர்பான விதிமுறையை உருவாக்க ரிசர்வ் வங்கியுடன் பேசியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.