மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை : நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம்

மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்து உள்ளார்.
மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை : நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம்
Published on

புதுடெல்லி

கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக ஒட்டுகேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த பார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து ஊடகங்கள் சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.

இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்ப்தற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் பட்டியலில் உள்ளன இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அதன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதி படுத்த ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சட்ட விரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே சாப்ட்வேர் விற்பனை என இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.இந்தியா உறுதியான ஜனநாயக நாடு என்றும் அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்ப்ட்டு உள்ளது.

இதே போன்று பெகாசஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பெகாசஸ் செயலியை சந்தைப்படுத்தும் இஸ்ரேலின் என்.எஸ். ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு மக்களவை கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மத்திய நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி தலையிட்டு அனைத்து விவாதங்களையும் விவாதிக்க தயார் எனவும் எதிர்க்கட்சியினர் தங்களது அமளிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது;-

ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் உண்மையல்ல. மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. மென்பொருள் நிறுவனமே எந்தெந்த நாடுகளில் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்று வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறு எனக்கூறியிருக்கிறது.

ஆகவே அந்த பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பது மறுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலமாக யாருடைய அலைப்பேசியையாவது உளவு பார்த்திருந்தால் அதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த பின்னரே உளவு பார்க்க முடியும். அப்படியில்லாத சூழ்நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதது.

ஒருவருடைய மொபைலை உளவு பார்க்கவேண்டும் என்றால் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் உளவு பார்க்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மக்களவை, மாநிலங்களை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மக்களவை, மாநிலங்களை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com