பில்கிஸ் பானு கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை: பா.ஜனதா தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது - சித்தராமையா கண்டனம்

பில்கிஸ் பானு கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு பா.ஜனதா தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுவதாக கூறி சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானு கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை: பா.ஜனதா தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது - சித்தராமையா கண்டனம்
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஓட்டுகளை கவர வேண்டும்

பில்கிஸ் பானு கொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிளை மன்னித்து விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது பா.ஜனதா தலைவர்களின் கொடூரமான மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானத்தை மத்திய மந்திரி அமித்ஷா ஏற்படுத்தியுள்ளார். அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பா.ஜனதா சில சிக்கலான விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வது துரதிருஷ்டமானது. குஜராத் தேர்தலில் ஓட்டுகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது ஏற்கத்தக்கது அல்ல. பெண்களின் கவலைகளை தீர்ப்பதை விட பா.ஜனதாவுக்கு தேர்தல் தான் மிக முக்கியம்.

மன்னிக்க மாட்டார்கள்

பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் இடையே இருக்கும் அழகான நல்லுறவு மக்களுக்கு தெரியும். ஆனால் பிரதமர் மோடிக்கு 2 குழந்தைகளை இழந்த தாயின் வலி ஏன் புரியவில்லை. குற்றவாளிகளை மன்னிக்கும் இந்த மனிதநேயமற்ற பா.ஜனதா அரசின் முடிவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பா.ஜனதாவில் உள்ள பெண் எம்.பி.க்கள் நிர்மலா சீதாராமன், ஷோபா ஆகியோர் எங்கே போனார்கள்.

பெண்களின் பக்கம் அவர்களால் நிற்க முடியாவிட்டால் அவர்கள் தங்களின் பதவியில் தொடர தகுதியற்றவர்கள். அரசியல் காரணங்களுக்காக கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை பார்த்து கொண்டு அவர்களால் அமைதியாக தூங்க முடியுமா?.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com