

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வேளி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவருடைய மகன் ஆதித்யன் (வயது 18). இவர் திருவனந்தபுரம் பகுதியில் ஐ.டி.ஐ படித்து வந்தார்.
இந்நிலையில், ஆதித்யன் நேற்று முன்தினம் நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே உள்ள கருப்பையாற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர்.
கடையால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணைமுகம் வழியாக பாய்ந்து செல்லும் கருப்பையாற்றின் தொடக்க பகுதியில் பாறைகள் நிறைந்த இடத்தில் குளித்து உள்ளனர்.
அப்போது ஆதித்யன் ஒரு பாறையில் ஏறியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக கால் தவறி பாறையில் விழுந்த ஆதித்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உடன் வந்த நண்பர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆதித்யன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.