இது முதிய விவசாயியின் வறுமை கதை: மனிதரே மாடாக மாறி ஏர் உழும் பரிதாபம்

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக இவ்வாறு தான் விவசாயம் செய்து வருகிறோம் என்று முதிய விவசாயி கூறியுள்ளார்.
மும்பை,
தேர்தல் சமயத்தில் அரசியல்கட்சி தலைவர்கள் விவசாயத்தை நவீன மயமாக்குவோம், விவசாயிகளுக்கான பயிர் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அவை வெறும் வாய் வார்த்தைகளாகவே முடிந்துவிடுகின்றன. அவ்வாறு நடைமுறை படுத்தப்பட்டாலும் அவை கடைக்கோடியில் உள்ள விவசாயிகள் வரை சென்று சேரும் என்றால் சந்தேகம் தான். இதை பிரதிபலிப்பது போன்ற சம்பவம் தான் லாத்தூரில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், முதிய விவசாயி ஒருவர் தனது தோளில் கலப்பையை பூட்டிக்கொண்டு தனது மனைவியுடன் விவசாய நிலத்தில் உழுவது போன்று பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை பார்த்த பலரும் யார் இந்த விவசாயி, ஏன் இந்த காலத்திலும் மனித கலப்பையாக வேலைப்பார்க்கிறார். அவர் எப்போது நவீன காலத்துக்கு மாறுவார் என விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் உண்மை நிலவரம் வேறு.
லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் பவார்(வயது65). விவசாயியான இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கோவிந்த் பவாருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் வறண்ட நிலம் உள்ளது. அந்த நிலத்தை உழுது பிழைப்புக்கு வழி தேட முயன்ற அவருக்கு டிராக்டர் அல்லது எருதுகள் வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ பணம் இல்லை. இதனால் தள்ளாத வயதிலும் தளராமல் தனது மனைவியுடன் சேர்ந்து மனித கலப்பையாக மாறி உழவு பணியை தொடங்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்ய அதிக பணம் தேவைப்படுகிறது. இதனால் நானும் எனது 60 வயது மனைவியும் மனித கலப்பையாக மாறிவிட்டோம். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக இவ்வாறு தான் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இப்போது என்னால் முடியவில்லை. என் கைகள் நடுங்குகின்றன. எனது கால்களால் நிற்க முடியவில்லை, எனது தலை நிமிர முயற்சிக்கிறது. உடலோ ஒத்துழைக்கவில்லை. வாழ்க்கையும் எங்களுக்கு வேறு வழியை காட்டவில்லை'' என்று உருக்கமாக கூறினார்.
மராட்டியத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் மாடாக மாறி உழைக்கும் காட்சி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






