

திருவனந்தபுரம்,
காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் பகுதியில் இயங்கி வரும் கல்லூரிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
அப்போது, திரைப்படங்களை பிரசார கருவியாக பயன்படுத்துவது குறித்து மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “கேரள மாநிலத்தையும், அதன் கலசாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பெரும்பாலானோர் புரிந்து கொள்ளவில்லை. கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது நல்ல செய்தி.
திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் தற்போது ஆயுதங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி, மக்களை வேறுபடுத்தவும், அழித்து ஒழிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நிறைய பணம் செலவிடப்படுகிறது. இது நாட்டிற்கு நல்லது அல்ல” என்று தெரிவித்தார்.
இதையடுத்து ராகுல் காந்தியின் பொழுதுபோக்கு விருப்பங்கள் குறித்து மாணவர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், “எனக்கு செஸ் விளையாடவும், தற்காப்பு கலை பயிற்சி செய்யவும் பிடிக்கும். மேலும் நீச்சல், ஓட்டம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் கேரளாவில் இருந்து ஒரு எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்கு 5 ஆண்டுகள் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த மாநிலத்தை ஆழமாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே சமயம், வயநாடு நிலச்சரிவின்போது, அங்குள்ள மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
மிகப்பெரிய துயரத்தின்போதும் மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். சாதி, மதம் கடந்து அனைவரும், அனைவருக்கும் உதவி செய்தனர். கேரளா மிகவும் பழமையான மற்றும் மதிப்புமிக்க மரபுகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள மாணவர்கள் மற்ற இடங்களிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டாலும், மாநிலத்தின் கலாசாரத்தில் வேரூன்றி இருக்க வேண்டும்” என்றார்.
இந்தியாவின் கல்வி அமைப்பு குறித்து பேசிய ராகுல் காந்தி, “ஆர்.எஸ்.எஸ் அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் மட்டுமே பெரும்பாலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக தற்போது நியமிக்கப்படுகின்றனர். கல்வி முறையில் சித்தாந்த அழுத்தம் உள்ளது. கல்வி என்பது எந்தவொரு குறிப்பிட்ட சிந்தனை முறைக்கும் உள்ளாக்கப்படக்கூடாது.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா இன்னும் சீனா அல்லது அமெரிக்காவின் நிலையை அடையவில்லை. டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ ஒன்று இந்திய ரோபோ என்ற பெயரில் சுற்றித்திரிந்ததை கண்டோம்.
ஏ.ஐ. துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், இந்தியா தனது தரவுகளை தானே நிர்வகிக்க வேண்டும். உலகத்தின் தரவுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு கிடைக்கிறது. சீனா தனது தரவுகளை தானே நிர்வகிக்கிறது. இதனால் அந்த நாடுகள் ஏ.ஐ. துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அமெரிக்காவுடனான சமீபத்திய ஒப்பந்தம் நமது முழுத் தரவையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியத் தரவுகளை அவர்கள் விரும்பும் இடத்தில் வைத்திருக்கலாம். அதற்கு வரி விதிக்கப்படாது. கடந்த 2 வாரங்களில் செயற்கை நுண்ணறிவு துறையில் நமது திறனை நாம் சேதப்படுத்திவிட்டோம்” என்று கூறினார்.
மேற்கு ஆசியாவில் நடைபெறும் சமீபத்திய போர்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, “மேலோட்டமாக பார்த்தால் இது ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் என்று தோன்றலாம். ஆனால் இதில் பரவலான புவிசார் சக்திகளாக அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகியவை உள்ளன. மத்திய கிழக்கில் இருந்து எரிசக்தியை பெறுவதால், இந்தியா கூட போரின் விலையை நேரடியாக கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. தரவுகளை கட்டுப்படுத்து மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் நமது நாடு உலகளாவிய சக்தியாக மாற முடியும். ஆனால் நாம் இப்போது செல்லும் பாதை, மதம், சாதி, மொழி என மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைக்கும் பாதையாகும்” என்றார்.
இதைத் தொடர்ந்து, அரசியலை ஒரு தொழிலாக செய்வது குறித்து பேசிய ராகுல் காந்தி, “அரசியலை நீங்கள் தீவிரமாகச் செய்ய விரும்பினால், உங்களுக்கென சில மதிப்புகளை கொண்டிருக்க விரும்பினால், அரசியல் என்பது மிகவும் கடினமான வேலை. நீங்கள் அதை சரியான காரணத்திற்காக செய்தால் நிறைய துன்பங்களை தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதே சமயம், நீங்கள் அதை தவறான காரணத்திற்காக செய்தால், அரசியல் மிகவும் எளிதானது” என்று கூறினார்.