பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும் - மேற்குவங்காளத்தில் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும் என்று மேற்குவங்காள தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்தார்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும் - மேற்குவங்காளத்தில் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் பக்முண்டி என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும். தேர்தல் என்பது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஆனால், மம்தா பானர்ஜியோ தன் மருமகனை அடுத்த முதல்-மந்திரியாக ஆக்குவதற்கு தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறார்.

உங்களுக்கு நல்லத் திட்டங்கள் தேவையென்றால் பிரதமர் மோடியை மனதில் வைத்து பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஊழலை நீங்கள் விரும்பினால், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். இதை நீங்களே முடிவு செய்யுங்கள். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 115 திட்டங்கள் கொண்டுவந்துள்ளார். ஆனால், மம்தா பானர்ஜி 10 ஆண்டுகளில் 115 ஊழல்கள் செய்துள்ளார். மாநிலத்தில் தற்போது ஊழல் நிறைந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, பழங்குடியின மக்களையும், குருமி இனத்தவர்களையும் புறக்கணித்துவிட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், பழங்குடியினத்தவர், குருமி இனத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும்.

குருமி சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு 10ம்வகுப்பு வரை அவர்கள் மொழியிலேயே பாடங்களை இலவசமாகப் படிக்கலாம். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் புர்லியா மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டத்தைக் கொண்டுவருவோம். இந்த மாவட்டத்தில் உள்ள ஜங்கிலிமஹால் பகுதியில் உறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com