சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்தார் இவாங்கா டிரம்ப்

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வருகை தந்தார்.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்தார் இவாங்கா டிரம்ப்
Published on

ஐதாரபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். இந்த மாநாட்டில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா ஆகியோர் வருவதையொட்டி ஐதராபாத் நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவாங்கா டிரம்ப் இன்று அதிகாலை ஐதராபாத் விமானநிலையம் வந்தடைந்தார். அவரை அமெரிக்க மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இவாங்கா டிரம்புடன் அமெரிக்க அதிபரின் ஆலோசகரும் வருகை தந்தார். வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா பங்கேற்கிறார். இந்த விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இங்கு சுமார் 2,000 பேர் கூடும் வசதி கொண்ட பிரமாண்ட விருந்து மண்டபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.

ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்பட முக்கிய இடங்களுக்கு செல்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டு தெற்காசியாவில் நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும். இந்த மாநாட்டு நவம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com