

ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில், சபரிமலைக்கு மாலை அணிந்து வேஷ்டியுடன் பணிக்கு வந்த ஊழியரை, ஆடைக் கட்டுப்பாடு விதிகளை காரணம் காட்டி உள்ளே அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் மனிஷ் என்ற ஊழியர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். இதன் காரணமாக, அவர் பாரம்பரிய முறைப்படி செருப்பின்றி வேஷ்டி அணிந்து அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது, நிறுவனத்தின் ஆடை கட்டுப்பாடு விதிகளை சுட்டிக்காட்டி, அவரை அலுவலகத்திற்குள் அனுமதிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஐயப்ப பக்தருக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, இந்து அமைப்பினர் அந்த ஐ.டி. நிறுவனத்தின் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க போவதாக 2 மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தேன். ஆனால் நேற்று, நிறுவனத்தின் உடை விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆனால், உடை விதிமுறைகளை பின்பற்றாத மற்றவர்களை நிர்வாகம் உள்ளே அனுமதித்துள்ளது. நான் ஐயப்ப விரத உடையில் சென்றால் மட்டும் ஏன் என்னை தடுக்கிறார்கள் என்று புரியவில்லை" எனத் தெரிவித்தார்.