காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

காஷ்மீரில் பால்டால் வழித்தடத்தில் அமர்நாத் யாத்திரை, மீண்டும் தொடங்கியது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
Published on

ஜம்மு,

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் யாத்திரை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று பனிலிங்கத்தை தரிசித்து வந்தனர். இந்த சூழலில் காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்ய தொடங்கியது. இதை தொடர்ந்து, மோசமான வானிலையால் கடந்த 8-ந் தேதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய 2 வழித்தடங்களும் யாத்திரை நிறுத்தப்பட்டு, பக்தர்கள் அடிவார முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். நேற்று முன்தினமும் காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் 2-வது நாளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் நேற்று வானிலை சற்று சீரடைந்தது. அங்கு மழை ஓய்ந்து, சூரியன் தென்பட்டது.

இதை தொடர்ந்து அங்குள்ள பால்டால் வழித்தடத்தில் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. அதே சமயம் மழை காரணமாக யாத்திரை செல்லும் மலை பாதைகள் வழுக்கும் நிலையில் இருப்பதால் ஹெலிகாப்டர் சேவை மூலம் மட்டுமே பக்தர்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதே வேளையில் பஹல்காம் வழித்தடத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் யாத்திரை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே யாத்திரை தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 90,000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com