ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பேரணி 11-ந்தேதி தமிழகம் வருகை

காவிரி நதிக்கு புத்துயிரூட்ட நடைபெறும் ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பேரணி 11-ந்தேதி தமிழகம் வருகிறது.
ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பேரணி 11-ந்தேதி தமிழகம் வருகை
Published on

பெங்களூரு,

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், விவசாய சங்கத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் காவிரி கூக்குரல் இயக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஜக்கி வாசுதேவ் 3,500 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 3-ந்தேதி தலைகாவிரியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர் குடகு, மடிகேரி, ஹன்சூர், மைசூரு, மண்டியா, பெங்களூரு வழியாக வருகிற 11-ந்தேதி தமிழகம் வருகிறார். ஓசூர் வரும் அவர் தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி வழியாக வருகிற 15-ந்தேதி சென்னை வருகிறார்.

11-ந்தேதி காலை 9 மணிக்கு ஓசூர் அதியமான் கல்லூரி, பிற்பகல் 2.30 மணிக்கு தர்மபுரி தி விஜய் மில்லேனியம் பள்ளி (சொகத்தூர்), 12-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேட்டூர் மேச்சேரி ஜெ.எஸ்.டபுள்யூ. அரங்கம், பிற்பகல் 3.15 மணிக்கு ஈரோடு குமாரப்பாளையம் எக்ஸல் கல்லூரி, 13-ந்தேதி காலை 11.30 மணி திருச்சி கலைஞர் அறிவாலயம், இரவு 7 மணிக்கு தஞ்சாவூர் மகாராஜா மஹால், 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கம், அன்று மாலை 5 மணிக்கு சென்னையில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் ஆகியவற்றில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டங்களில் ஜக்கி வாசுதேவ் உரை நிகழ்த்த உள்ளார். இதில் அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

இந்த பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி வருகிற 17-ந் தேதி கோவை கொடிசியா அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஜக்கி வாசுதேவ் செல்லும் இடங்களில் எல்லாம் உள்ளூர் மக்கள் திரளாக பங்கேற்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com