ஜெகதீப் தன்கர் ராஜினாமா: நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா..? - வெளியான பரபரப்பு தகவல்கள்

கோப்புப்படம்
ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார். அதில், பதவி காலத்தில் இந்திய ஜனாதிபதி அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமருக்கும், மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
2022-ம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், 3 ஆண்டு காலம் பதவியில் நீடித்து வந்த அவர் திடீரென நேற்று முன் தினம் மாலை ராஜினாமா முடிவை அறிவித்தார். இது பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தசூழலில் இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதனால் புதிய துணை ஜனாதிபதியை விரைவில் தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஜனாதிபதி பதவி காலியாக இருந்தால் 6 மாதத்துக்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் துணை ஜனாதிபதி பதவி காலியானால் விரைவில் புதியவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
புதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்கப்படும் வரை தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவரான ஹரிவன்ஷ் நாராயண்சிங் மாநிலங்களவை தலைவர் பொறுப்பை கவனிப்பார். இதனையடுத்து நேற்று அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு உடல்நல பிரச்சினைகளை அவர் காரணமாக கூறி இருந்தாலும், இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் நெருக்கடி இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நீதித்துறையுடன் அவருக்கு இருந்த மோதல் போக்கு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என சொல்கிறார்கள்.
புதிய துணை ஜனாதிபதி யார்?
அதே நேரத்தில் பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கையாகவும் இது நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதி ஆக்கி, பீகாரை பா.ஜனதா ஆட்சி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இது தொடர்பான கேள்விக்கு பாட்னாவில் பதில் அளித்த அமைச்சர் நீரஜ் குமார் சிங் பப்லு, "அது ஒரு நல்ல விஷயம். நிதிஷ் குமார் பதவியேற்றால் அதில் என்ன பிரச்சினை?" என தெரிவித்தார்.
இந்த கருத்துகள் எதுவும் அதிகாரப்பூர்வமானதாக இல்லாததால் அடுத்த துணை ஜனாதிபதியாக இன்னார் வருவார் அல்லது இவர் வருவார் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
இதில் ஜே.பி.நட்டா, சசிதரூர், தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஜே.பி.நட்டா பா.ஜனதா தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்பதாலும், மாநிலங்களவை அனுபவம் இருப்பதாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
சசிதரூர், காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தாலும் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்ததால் அவரும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த யூகங்களுக்கு இடையே சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரும் அடிபடுகிறது.
ஆனால் இதற்கு முந்தைய பல நியமனங்கள் யூகங்களுக்கு அப்பாற்பட்டு செய்யப்பட்டன. அதுபோல இதிலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தால் தலைநகர் டெல்லி தற்போது பரபரப்பாகி உள்ளது.






