சிறை கைதியான என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி

என்ஜினீயர் ரஷீத் வருகிற 5-ந்தேதி எம்.பி.யாக பதவியேற்பார் என்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறை கைதியான என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அப்துல் ரஷீத் ஷேக். என்ஜினீயர் ரஷீத் என்றும் பரவலாக அறியப்படுகிறார். பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட இவர், 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அவர், எம்.பி.யாக பதவியேற்க இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்க வேண்டும் என கோரி சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்தர் ஜித் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி இன்று உத்தரவு பிறப்பிப்பார் என தெரிகிறது. இதனால், வருகிற 5-ந்தேதி என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்பார். அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி அரசியல் சாசன நிபுணர் மற்றும் மக்களவையின் முன்னாள் பொது செயலாளரான பி.டி.டி. ஆச்சாரி முன்பு கூறும்போது, எம்.பி.யாக பதவியேற்பது என்பது அரசியல் சாசன உரிமை. எனினும், அவர் சிறையில் உள்ள சூழலில், பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க, நாடாளுமன்றத்திற்கு செல்ல பாதுகாப்பு வேண்டுமென அதிகாரிகளிடம் அனுமதி கேட்க வேண்டும்.

அவர் பதவி ஏற்றதும், சிறைக்கு திரும்ப வேண்டும். பதவி பிரமாணம் எடுத்து கொண்டதும், சபாநாயகருக்கு அவர் கடிதம் எழுத வேண்டும். அவையில் பங்கேற்க முடியாது என அதில் தெரிவிக்க வேண்டும். அவரின் கோரிக்கையை சபாநாயகர், அவைக்கு வராத உறுப்பினர்களுக்கான அவை கமிட்டிக்கு அனுப்பி வைப்பார்.

இந்த கமிட்டியானது, அவை நடவடிக்கைகளில் அந்த குறிப்பிட்ட எம்.பி. பங்கேற்காமல் இருக்க அனுமதிப்பது அல்லது மறுப்பது ஆகியவற்றை பற்றி பரிந்துரை வழங்கும். இந்த பரிந்துரை, பின்னர் சபாநாயகரால் வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com