

அகமதாபாத்,
சுற்றுலா பயணி போல நடித்து இந்திய விமானப்படை தளத்தை உளவு பார்த்து, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இளைஞரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவு பார்த்து, தனிநபராக தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சஹருல் இஸ்லாம் (வயது 22) என்ற இளைஞரை மடக்கி பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண சுற்றுலா பயணி போல வதோதரா விமானப்படை நிலையத்திற்கு சென்ற அவர், அதன் வெளிப்புற பகுதிகள் மற்றும் முக்கிய நுழைவாயில்களை தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, விமானப்படை தளத்தின் நுழைவாயில் புகைப்படங்களில் சிவப்பு நிறத்தில் குறியீடுகள் இடப்பட்டிருந்தது தெரியவந்தது. தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகளை அடையாளம் காணவே அவர் இவ்வாறு குறியிட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அவரது செல்போனில் பாகிஸ்தானை சேர்ந்த தொலைபேசி எண் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நபர் ஒருவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக இவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபர் சஹருல் இஸ்லாமுக்கு ஆயுதங்களை கையாளுவது குறித்த பயிற்சி வீடியோக்களை அனுப்பியுள்ளார். பதிலுக்கு இஸ்லாம் விமானப்படை தளத்தின் ரகசிய வீடியோக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ராணுவ பாதுகாப்பு தொடர்பான இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருக்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானப்படை நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தனிநபர் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைவதே இஸ்லாமின் விருப்பமாக இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த அமைப்பில் இணைவதற்கு முன்பு அமைப்பின் விசுவாச உறுதிமொழியையும் அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.