

புதுடெல்லி,
ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாத அமைப்பினர் இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை வைத்து தாக்க திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் இந்திய கடற்படை கப்பல்களைத் தாக்க பாகிஸ்தான், பகவல்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆழ்கடல்களில் தீவிரமாக பயிற்சி பெற்று வருவதாகவும், அதற்கான திட்டங்களையும் வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவின் முக்கியமான ஏவுகணைத் தாங்கி நீர்முழ்கிக் கப்பல்களான ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் மேலும் அணு குண்டு தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்கள்களை பாதுகாக்குமாறு கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து துறைமுகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், ஆழ்கடல் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கும் அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்திய கடற்படை தளம் மற்றும் துறைமுகங்கள் பல அடுக்கு பாதுகாப்புகளை கொண்டது என்று கடற்படையின் மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மூழ்கி வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அதி நவீன சோனார் தொழில்நுட்பங்கள் மூலம் ஆழ்கடல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும், உலக அளவில் முதன்மையான கடற்படை போர்கப்பல்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு, ஏமனில் அமெரிக்காவுக்கு சொந்தமான போர்க்கப்பல் எரிபொருள் நிரப்பிக்கொண்டு இருந்த போது, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டு நிரப்பிய படகை கப்பல் மீது மோத செய்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க கடற்படை மாலுமிகள் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.