ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை கருப்பு பணம் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது அருண் ஜெட்லி

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணம் சம்பந்தமானது மட்டும் கிடையாது என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை கருப்பு பணம் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது அருண் ஜெட்லி
Published on

புதுடெல்லி,

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாக கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் அளிக்கப்பட்டது.

பின்னர், புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி 201617க்கான ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னர் 632.6 கோடி, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில் 8.9 கோடி நோட்டுகள் திரும்ப வரவில்லை. இது 1.4 சதவீதமாகும்.

கடந்த ஆண்டு (2016) மார்ச் 31ந் தேதி வரை நாடு முழுவதும் 1,570.7 கோடி, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. ஆனால் இது இந்த ஆண்டு (2017) மார்ச் 31ந் தேதியில் 588.2 கோடியாக குறைந்தது. ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவு தற்போது 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,421 கோடியாக இருந்த இந்த தொகை, தற்போது ரூ.7,965 கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 7.62 லட்சம் எண்ணிக்கையில் கள்ளநோட்டுகள் சிக்கி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 20.4 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என கூறி உயர் மதிப்புடைய நோட்டுகளை வாபஸ் பெற்ற மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளன. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து உள்ள நிலையில் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ள மத்திய மந்திரி அருண் ஜெட்லி, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணம் சம்பந்தமானது மட்டும் கிடையாது என கூறிஉள்ளார். மக்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்வதற்காக, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வரவில்லை.

கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிப்பது; பயங்கரவாத நிதியகத்தை முடக்குவது, வங்கி கணக்கிற்கு வராத பணத்தை வங்கி சுழற்சிக்கு கொண்டுவர; ரொக்கப் பரிவர்த்தனையை குறைப்பது; மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பது ஆகிய காரணங்களுக்காக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நகர்வால் மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் வைத்திருந்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டிய நிலையானது ஏற்பட்டது என்றார் அருண் ஜெட்லி.

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளநிலையில் ஜெட்லி, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, தங்களது ஆட்சிக் காலத்தில் ஒரு சிறு நடவடிக்கையை கூட எடுக்காத சிலர், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடியில், ரூ.15.28 லட்சம் கோடி வங்கி சுழற்சிக்கு வந்துவிட்டன. அவற்றிலும் ஒரு குறிப்பிட்ட தொகையானது கருப்புப் பணமாக இருக்கலாம் என்றார்.

முன்னதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்; பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது 1 சதவீத பழைய ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கிக்கு வராதது சாதனையா? என கேள்வி எழுப்பினார். 99 சதவீத பழைய நோட்டுகள் வங்கிகளில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டு உள்ளது. ஒரு சதவீத அளவிற்கே பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருப்பது வெட்ககேடானது. இதுதான் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் சாதனையா? இதற்காகத்தானா பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது?... இந்த நடவடிக்கையில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி கண்டதுடன் அப்பாவி மக்கள் 104 பேரையும் பலி வாங்கியது. இதற்காக பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த பொருளாதார நிபுணர்கள் நோபல் பரிசு பெற தகுதியானவர்கள். ஏனென்றால், பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்ததால் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் கிடைத்து உள்ளது. அதே நேரம் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக ரூ.21 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது இவ்வாறு அவர் கூறி இருந்தார் ப.சிதம்பரம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com