ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: 4 பேர் பலி
காஷ்மீர்,
காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் சசோட்டி நகருக்கு அருகில் மலைமீது உள்ள துர்க்கா தேவி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. அந்த கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமானோர் சசோட்டி நகரில் கடந்த 14-ந்ேததி குவிந்து இருந்தனர்.
அன்று மதியம் சசோட்டியில் மேகவெடிப்பு காரணமாக பெருமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் ஓடியது. இந்த வெள்ளத்தில் சசோட்டி நகரில் திரண்டு இருந்த பக்தர்கள் உள்பட ஏராளமானோர் மாயமானார்கள். வீடுகள் சேதமடைந்தன. பல இடங்களில் வாகனங்கள் சேற்றில் புதைந்துள்ளன.
இந்த வெள்ளத்தில் சிக்கி 60 பேர் வரை பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து இன்றும் 4-வது நாளாக தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மாயமானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக வழியில் சில சாலைகள் சேதமடைந்துள்ளதாக கதுவா துணை ஆணையர் ராஜேஷ் சர்மா கூறியுள்ளார்.






