

ஸ்ரீநகர்,
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே இயக்கப்படும் 20 பெட்டிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை ஏப்ரல் 30-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து இந்த ரெயிலின் சேவைகள் மே 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
ஸ்ரீநகருக்கும், ஜம்முவுக்கும் இடையேயான நேரடி ரெயில் சேவைகள், இரண்டு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படக்கூடிய ஒரு தரைவழிப் போக்குவரத்து இணைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இந்த ‘வந்தே பாரத்’ ரெயில், ஜம்மு தாவியில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கி, பள்ளத்தாக்கின் சவாலான புவியியல் நிலப்பரப்புகளை இணைத்துக்கொண்டு ஸ்ரீநகர் வரையிலான பாதையில் பயணிக்கும். அதே நேரத்தில், ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கி ஒரு ரெயில் புறப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.