3 பேர் ஓட்டை மாற்றி போட்டதால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் அதிர்ச்சி தோல்வி

கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 3 பேர் ஓட்டை மாற்றிப்போட்டதால் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து தோல்வி அடைந்தவரின் ஆதரவாளர்களான 9 உறுப்பினர்களும் கோவிலில் சென்று சத்தியம் செய்த சம்பவத்தால் குழப்பம் நீடிக்கிறது.
3 பேர் ஓட்டை மாற்றி போட்டதால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் அதிர்ச்சி தோல்வி
Published on

மைசூரு:-

இன்ப சுற்றுலா

சட்டசபை, நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்காளர்களை கவர பரிசுப்பொருட்கள், பணத்தை வேட்பாளர்கள் வாரி வழங்கும் நிகழ்வுகள் நடக்கிறது. அதுபோல் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலுக்கும் சட்டசபை தேர்தல் போல் உறுப்பினர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்லுதல், பரிசுப்பொருட்கள் வழங்குதல் என தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் குளிர வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இப்படி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவர், தனது ஆதரவு உறுப்பினர்களை இன்ப சுற்றுலா அழைத்து சென்றதுடன், தலைவர் தேர்தலில் தனக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று கோவிலில் சத்தியம் வாங்கிய நிலையில் தோல்வியை சந்தித்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

9 பேர் ஆதரவு பெற்ற வேட்பாளர்

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமா தாலுகாவில் உள்ளது மேலூர் கிராம பஞ்சாயத்து. இந்த கிராம பஞ்சாயத்தில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) சார்பில் தலைவர் பதவிக்கு பாரதி விஸ்வநாத்தும், காங்கிரஸ் சார்பில் விஜய ராமகிருஷ்ணகவுடாவும் போட்டியிட்டனர். இதில் பாரதி விஸ்வநாத்திற்கு கவுதம், லீலாவதி, நரேந்திரகுமார், மகாதேவம்மா, தீபிகா, வெங்கடேஷ், புட்டசாமி கவுடா, குள்ளையா குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு

இதனால் பாரதி விஸ்வநாத் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. இதனால் அவர், தனது ஆதரவு உறுப்பினர்களை சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கு இன்ப சுற்றுலா அழைத்து சென்றார். விஜய ராம

கிருஷ்ண கவுடாவுக்கு அவருடன் சேர்த்து 6 பேரின் ஆதரவு மட்டுமே இருந்தது.

மேலும் தேர்தலில் தனக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று 8 பேரிடமும் பாரதி விஸ்வநாத் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் உள்ள சந்தகோலம்மா கோவிலில் வைத்து சத்தியமும் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலூர் கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. இதில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.

மாறி ஓட்டுப்போட்ட 3 பேர்

இதில் யாரும் எதிர்பாராத வகையில் விஜயா ராமகிருஷ்ண கவுடாவுக்கு 9 வாக்குகள் கிடைத்தது. அதாவது 3 பேர் மாறி ஓட்டுப்போட்டது தெரியவந்தது. பாரதி விஸ்வநாத்துக்கு வெறும் 6 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதனால் விஜயா ராமகிருஷ்ண கவுடா வெற்றிகனியை ருசித்தார். பாரதி விஸ்வநாத் தோல்வி அடைந்தார். தனக்கு 9 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்த்த அவர் தனக்கு ஆதரவாக 6 பேரின் ஆதரவு கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பாரதி விஸ்வநாத்துக்கு தான் வாக்களித்தோம் எனக் கூறி கப்படி ராஜப்பா கோவிலில் கற்பூரம் ஏற்றி 9 உறுப்பினர்களும் சத்தியம் செய்தனர். இதனால் கட்சி மாறி ஓட்டுப்போட்ட 3 பேர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com