

இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டின் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பது இந்திய விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு அனுப்பப்படும் பழங்கள் அனைத்தையும் 'வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்' என்று சொல்லப்படும் ஆவி வெப்பம் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்பது ஜப்பான் பின்பற்றும் மிக முக்கியமான விதியாகும். இந்தச் சுத்தப்படுத்தும் வேலையை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் நேரில் வந்து, அவர்களின் நேரடிப் பார்வையில் இந்தியாவில் உள்ள ஆலைகளில் இதனை செய்ய வேண்டும். ஆனால், இந்த வருடம் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட ஆலைகளில் இந்தச் சுத்தப்படுத்தும் முறைக்கான கட்டமைப்பு, சரியாக வேலை செய்யவில்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ஒட்டு மொத்தமாக இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. ஜப்பானின் இந்த இறக்குமதி தடையால் மாம்பழ விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.