ஜாவத் புயல்; தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 33 குழுக்கள் குவிப்பு

ஜாவத் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் பொறுப்பு படையை சேர்ந்த 33 குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன.
ஜாவத் புயல்; தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 33 குழுக்கள் குவிப்பு
Published on

புதுடெல்லி,

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால், மழை, வெள்ளம் என மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு 'ஜாவத்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. 'ஜாவத்' என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். 'ஜாவத்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ந்தேதி ஒடிசாவிலும், டிசம்பர் 5ந்தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் புயல் சார்ந்த சூழலை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பிரதமருக்கான முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பு, தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கார்வார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜாவத் புயலை எதிர்கொள்வதற்காக தேவையான இடங்களில் 29 குழுக்கள் முன்பே குவிக்கப்பட்டு விட்டன. தற்போது மொத்தம் 33 குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com