

பெங்களூரு,
சசிகலா விடுதலை செய்யப்பட்ட பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விக்டோரியா அரசு மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அ.ம.மு.க. தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட முறையில் இது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சசிகலா நன்றாக உள்ளார்.
நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லும் திட்டம் இல்லை. இங்கே நன்றாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும 2 நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்வதாக டாக்டர்கள் கூறினர். அதில் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால், சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதனால் அதுவரை நாங்கள் பொறுமையாக இருப்போம். அவரது உடல்நிலை முதலில் தேற வேண்டும். அதன் பிறகு அவரை தமிழகம் அழைத்து செல்வது குறித்து முடிவு செய்வோம். சசிகலா விடுதலை செய்யப்பட்ட இந்த நாளில் சென்னையில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. இதை, சசிகலாவின் விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகிறார்கள் என்று தான் பார்க்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அ.ம.மு.க. தொடங்கப்பட்டதே அ.தி.மு.க.வை மீட்டு எடுத்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான். அதனால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.