

புதுடெல்லி,
கொரோனா வைரசின் இரண்டாம் அலை காரணமாக, ஜே.இ.இ. பொறியியல் நுழைவுத் தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜே.இ.இ.(JEE) மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரையும், நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ஜே.இ.இ.யின் மூன்றாம் கட்டத் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்கள் ஜூலை 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும், நான்காம் கட்ட தேர்வுக்கு ஜூலை 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் தேர்வு மையங்களை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றக்கூடிய வகையில் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.