

புதுடெல்லி,
25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் அதன் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டனர். நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துவருவதாலும், கடன் நெருக்கடிகளாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் ஏர்வேஸ் நிறுவன நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மேலும் ரூ.1,500 கோடி முதலீடு செய்வதென ஒரு கடன்தீர்வு திட்டத்தை செயல்படுத்தின. இதன்மூலம் அந் நிறுவனம், ஊழியர்களின் வேலை, போக்குவரத்து இணைப்பு ஆகியவை காப்பாற்றப்படுகிறது.
இந்நிலையில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி, முறைகேடான பணப்பரிமாற்றம் ஆகிய வழக்குகளை சந்தித்துவரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா லண்டனுக்கு சென்றுவிட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவர் முயன்று வருகிறார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன விவகாரம் குறித்து விஜய் மல்லையா டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பொதுத்துறை வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இதேபோல கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் செய்திருக்கலாம். ஊழியர்களின் வேலை, போக்குவரத்து இணைப்பு மற்றும் நிறுவனத்தை காப்பாற்ற பொதுத்துறை வங்கிகள் கடன்தீர்வு திட்டம் மூலம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் இதே பொதுத்துறை வங்கிகள் சிறந்த ஊழியர்களையும், போக்குவரத்து இணைப்பும் கொண்ட இந்தியாவின் அருமையான ஏர்லைன்ஸ் (கிங்பிஷர்) நிறுவனத்தை இரக்கமின்றி மூடச்செய்துவிட்டன. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசில் வங்கிகள் இரட்டை வேடம் போடுகின்றன.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும் காப்பாற்ற நான் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்தேன். பா.ஜனதாவினர் அப்போது பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பொதுத்துறை வங்கிகள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு தவறாக ஆதரவு தருகின்றன என்று எடுத்துக்கூறினர்.
பா.ஜனதா ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு வெவ்வேறான நிலையை எடுத்துள்ளது.
வங்கிகளுக்கும், இதர கடன்காரர்களுக்கும் நான் கொடுக்க வேண்டிய கடனுக் காக எனது மது ஆலை சொத்துகள் முழுவதையும் கர்நாடகா ஐகோர்ட்டில் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன் என மீண்டும் சொல்கிறேன். ஏன் வங்கிகள் எனது பணத்தை வாங்கிக்கொள்ள மறுக்கின்றன. இவ்வாறு விஜய் மல்லையா கூறியுள்ளார்.