

புதுடெல்லி,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து மும்பை நோக்கி கடந்த 1 ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு குழந்தைகள் உள்பட 324 பயணிகளும், 14 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் ஈரான் பாகிஸ்தான் இடையே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் அறையில் இருந்த ஆண் விமானிக்கும், பெண் விமானிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது.
இதில், ஆவேசம் அடைந்த விமானி, பெண் விமானியின் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான அவர், விமானிகள் அறையில் இருந்து அழுது கொண்டே வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில், விமானத்தை இயக்கும் பொறுப்பை சிப்பந்திகளிடம் ஒப்படைத்து விட்டு ஆண் விமானியும் வெளியேறினார். விமானம் மும்பை வந்தடைய சுமார் 2 மணிநேரம் இருந்த நிலையில், விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானி அறையில் இருந்து இரு விமானிகளும் வெளியேறியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இரு விமானிகளையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. மோதலில் ஈடுபட்டு அறையில் இருந்து வெளியேறிய இணை விமானியின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையிலும் விமான போக்குவரத்து இயக்குநகரம் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #JetAirways