

ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் மாவோயிஸ்டுகள் 25 பேர் மற்றும் ஜே.ஜே.எம்.பி. நக்சலைட்டுகள் 2 பேர் என மொத்தம் 27 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசில் சரண் அடைந்தனர். ஜார்க்கண்ட் டி.ஜி.பி. தடாஷா மிஷ்ரா, மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
அவர்களில் பலர் மேற்கு சிங்பம், கும்லா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது. அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை போர்த்தியும் வரவேற்ற போலீசார் ஊக்கத்தொகையையும் வழங்கினர்.
இவர்களில் பலர் தேடப்படும் நபர்களாகவும், பரிசு தொகை அறிவிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
நடப்பு ஆண்டில் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். 44 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 29 பேர் சரணடைந்துள்ளனர். மீதமுள்ளவர்களும் வன்முறை பாதையை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.