

ராஞ்சி,
ஜார்க்கண்ட்டில் 4 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதேவேளை, பாதுகாப்புப்படையினரின் நடவடிக்கைகளை தொடர்ந்து நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் பலர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அவ்வாறு சரணடைபவர்களுக்கு அரசு தரப்பில் மறுவாழ்வு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் பக்டா கிராமத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த கிராமத்தில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அங்கு பதுங்கி இருந்த விஷ்ராம் கொங்கடி (வயது 28), அமென் சுரின் (வயது 34), எட்வா கொங்கடி (வயது 38), அர்பித் டாப்னொ (வயது 22) ஆகிய மாவோயிஸ்டுகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 4 பேரிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.