ஜார்க்கண்ட்: சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
கும்லா,
ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திருமண ஊர்வலம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்ட 4 சிறுமிகள், ஊர்வலத்தை விட்டு ஒதுக்குப்புறமாக இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது. இதைக்கண்டு சுதாரித்துக்கொண்ட சிறுமிகள், அந்த இடத்தை விட்டு தப்பியோட முயற்சித்தனர். இதில் 3 பேர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தனர்.
எனினும், ஒரு சிறுமி அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவர்கள் அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி மயக்கமடைந்ததால், இறந்ததாக நினைத்து அவர்கள், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். சிறுமியின் பெற்றோர், நீண்ட நேரம் தேடி அலைந்து இறுதியில் காட்டுப்பகுதியில் தங்களது மகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மயக்கம் தெளிந்த நிலையில், சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 6 பேரையும் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் 19 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.






