ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.எம்.எம்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ராஞ்சி தொகுதியில் மஹுவா மாஜி போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.எம்.எம்.
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்கு புதிய அரசு தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனது 2ம் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ராஞ்சி தொகுதியில் ராஜ்யசபா எம்பி மஹுவா மாஜி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாஜி, முன்பு ஜார்க்கண்ட் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், ஜேஎம்எம் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார். அவர் 2014 மற்றும் 2019 இல் ராஞ்சி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது. அதில் அம்மாநில முதல்-மந்திரியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியிலும், அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com