ஜார்க்கண்ட்: வேன் மீது லாரி மோதி விபத்து - இசைக்குழுவினர் 8 பேர் பலி!

வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட்:  வேன் மீது லாரி மோதி விபத்து - இசைக்குழுவினர் 8 பேர் பலி!
Published on

ராஞ்சி ,

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இசைக்குழுவைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேன்-லாரி மோதி விபத்து

ராம்கர் மாவட்டம் பார்லோங் கிராமம் அருகே, ராம்கர்–போகாரோ தேசிய நெடுஞ்சாலை (என்எச்-23) வழியாக இசை நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு வேனில் ராம்கருக்குத் திரும்பிக் கொண்டிருந்த இசைக்குழுவினர் மீது, எதிரே அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதால், அதில் பயணம் செய்த ஹேமந்த் மக்தோ (27), மனிஷ் குமார் (22), அனோத் குமார் (30), சக்தி காளிந்தி (35), அசோக் காளிந்தி (40), விஷால் கர்மாலி (25), பவன் கர்மாலி (30), பப்பு கர்மாலி (26) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.

8 பேர் பலி

விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த அனைவரும் ராம்கர் சதார் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து ராஜரப்பா நகர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com