

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் இயங்கி வரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை உபா சட்டத்தின் கீழ் சட்ட விரோத அமைப்பாக கடந்த 2019-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது. பின்னர் இது 2024-ம் ஆண்டும் நீட்டிக்கப்பட்டது.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் பலா-இ-ஆம் அறக்கட்டளை சார்பில் காஷ்மீரில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த பள்ளிகளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளின் நிர்வாகத்தை அரசே எடுத்துக்கொள்ளப்போவதாக நேற்று முன்தினம் காஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய 215 பள்ளிகளின் நிர்வாகம் காலாவதியாகிவிட்டது. அவற்றின் நிர்வாகத்தை மாவட்ட கலெக்டர்கள் அல்லது துணை கமிஷனர் எடுத்துக்கொள்வார். பின்னர் புதிய நிர்வாக கமிட்டி ஒன்றை அவர் பரிந்துரைப்பார் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ள அரசு, அவர்களின் கல்வி எதிர்காலம் எந்தவகையிலும் பாதிக்காத வகையில் மாவட்ட கலெக்டர் அல்லது துணை கமிஷனர்கள் நிர்வாகத்தை கையகப்படுத்துவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 10 மாவட்டங்களில் இயங்கி வரும் 215 பள்ளிகளின் நிர்வாகத்தை அரசு நேற்று எடுத்துக்கொண்டது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பள்ளிகளுக்கு சென்று பள்ளிகளை கையகப்படுத்தினர். மேலும் பள்ளிகளின் ஆவணங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, ஊழியர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினர். இந்த நடவடிக்கை முற்றிலும் அமைதியாகவும் சீராகவும், குறிப்பாக மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கையை பா.ஜனதா வரவேற்று உள்ளது. இதன் மூலம் அபாயகரமான சுழற்சியை உடைத்து, ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாத்து இருப்பதாக கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் கல்வி மந்திரியுமான பிரியா சேதி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சியில் காஷ்மீர் இளைஞர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள மற்றொரு நடவடிக்கை இது என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதேநேரம் காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நடவடிக்கை எனவும், பா.ஜனதாவின் செயல்திட்டத்தை அமல்படுத்தி தனது சொந்த மக்களுக்கு எதிராகவே ஆளும் தேசிய மாநாடு கட்சி செயல்படுவதாகவும் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.