திரைப்பட பாணியில் திருமணம்: காதலை பெற்றோர் ஏற்காததால்.. விபரீத முடிவெடுத்த என்ஜினீயர் தம்பதி

இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.
திரைப்பட பாணியில் திருமணம்: காதலை பெற்றோர் ஏற்காததால்.. விபரீத முடிவெடுத்த என்ஜினீயர் தம்பதி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி(வயது 32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம்(மார்ச்)31-ந் தேதி பானு சந்தர் ரெட்டியும், ஷாஷியாவும் தற்கொலை செய்து கொண்டனர்.

பானுசந்தர் ரெட்டி தூக்குப்போட்டும், 17-வது மாடியில் இருந்து குதித்து ஷாஷியாவும் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பானு சந்தர் ரெட்டி அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலை பார்த்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) மூலம் பணிகளை மேற்கொண்டதால் ஏராளமான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. அதில் பானு சந்தர் ரெட்டியும் ஒருவர் ஆவார்.

இதையடுத்து அவர் அங்கு பல நிறுவனங்களில் வேலைக்கு முயற்சித்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதையடுத்து அவர் கனடா நாட்டுக்கு சென்று வேலைக்கு முயற்சித்தார். அங்கும் அவருக்கு வேலை கிடைக்காததால் மனம் நொந்து போனார். முடிவில் அவர் இந்தியா திரும்பினார். அதுபோல் ஷாஷியா ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு திடீரென தனது பணியை உதறிய ஷாஷியா, பின்னர் ஐ.பி.எம். நிறுவனத்தில் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் அளவில் பணியில் சேர்ந்தார். பின்னர் பானு சந்தர் ரெட்டியும், ஷாஷியாவும் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் தங்களது சிறுவயது முதலே அறிமுகமானவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து இருவரும் 'அலைபாயுதே' பட பாணி யில் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர். ஒரு கட்டத்தில் பானு சந்தர் ரெட்டி தனக்கு திருமணம் நடந்தது குறித்து தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அவரது தாய், அதுமுதல் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அவரது குடும்பத்தாரும் அவரை ஒதுக்கி விட்டனர். இதனால் பானு சந்தர் ரெட்டி மிகவும் நொந்துபோனார். அதுபோல் ஷாஷியாவின் குடும்பத்தாருக்கும் அவரது திருமணம் குறித்து தெரிந்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது. அப்போது ஷாஷியா குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் அவ்வப்போது பண்டிகை நாட்களுக்கு மட்டும் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் பானு சந்தர் ரெட்டி இந்தியா திரும்பினார்.

அதையடுத்து பானு சந்தர் ரெட்டியும், ஷாஷியாவும் பெங்களூருவுக்கு குடியெர்ந்து தங்களது வாழ்க்கையை தொடங்கினர். ஆனால் தாய் தன்னுடன் பேசாததாலும், குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி விட்டதாலும், வேலை இல்லாததாலும் மனம்நொந்து காணப்பட்ட பானு சந்தர் ரெட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் வெளியே சென்றிருந்த ஷாஷியா வீட்டுக்கு வந்துள்ளார். தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச முயன்றார். 2 முறை முயற்சித்து அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை. இதனால் மனமுடைந்த ஷாஷியா, 'அம்மா என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டது தவறு தான். நான் பொய் கூறி விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்' என்று ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 17-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதல் கணவனான பானு சந்தர் ரெட்டியை முழுமையாக நம்பி, மற்ற அனைத்தையும் உதறிவிட்டு வந்த ஷாஷியா தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் பானு சந்தர் ரெட்டி எழுதியிருந்த கடிதத்தில், 'எனக்கு மற்றவர்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. எனக்கும், என் மனைவிக்கும் நீதி கிடைக்கவில்லை. என்னால் என் மனைவியை என்னுடைய குடும்பத்தார் மற்றும் பெற்றோரிடம் கூட அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை' என்று எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உடல்கள், அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இருவரது உடல்களையும் ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்ல இருகுடும்பத்தினரும் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் 'வாழும்போது தான் அவர்கள் ஒன்றாக இல்லை, இறந்த பிறகாவது அவர்கள் ஒன்றாக செல்லட்டும்' என்று மற்றவர்கள் எடுத்துக்கூறியதால் இரு குடும்பத்தாரும் இருவரது உடல்களையும் ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com