

கேரள மாநிலத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், நேற்று கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் நலத்திட்ட ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பயன்பெறுவர்.
மாநிலத்தில் படிப்பை முடிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்த கல்வியாண்டில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
50 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; படித்தவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
தெற்கு-வடக்கு அதிவேக ரெயில் பாதைக்கான முயற்சிகள் தொடரும். 5 ஆண்டுகளில் தொழில் துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்படும். அனைவருக்கும் வரம்பற்ற மருத்துவ பலன்களை வழங்கும் சுகாதார திட்டம் அமல்படுத்தப்படும்.
குடியுரிமை சட்டம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய பூர்வீக அட்டைகள் வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 50 சதவீதம் பேருக்கு தொழில் உறுதி செய்யப்படும்.
நெல்லின் ஆதார விலை ரூ.35 ஆகவும், தேங்காய்க்கு ரூ.45 ஆகவும், ரப்பருக்கு ரூ.300 ஆகவும் உயர்த்தப்படும்.
திருவனந்தபுரத்திலும், கோழிக்கோட்டிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
கொச்சி நீர் மெட்ரோ ஆலப்புழா, கொல்லம் மற்றும் கொடுங்கல்லூர் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
ஆளில்லா ரயில்வே கேட்டுகள் இல்லாத மாநிலமாக கேரளா மாற்றப்படும். இவ்வாறு இடதுசாரி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.