போலி சாதிச்சான்றிதழில் பணியில் சேர்ந்தால் உடனடி நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போலி சாதிச்சான்றிதழ்களை பயன்படுத்துவோர், தங்கள் கல்வித்தகுதி மற்றும் வேலையை இழக்க நேரிடும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு.
போலி சாதிச்சான்றிதழில் பணியில் சேர்ந்தால் உடனடி நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தி சில அரசு ஊழியர்கள் போலியாக சாதிச் சான்றிதழ்களை பெற்று அரசுப் பணியில் சேர்ந்ததை கண்டறிந்த மாநில அரசு, அப்படி போலியாக சாதிச்சான்றிதழ் பயன்படுத்தி பணியில் சேர்ந்த சிலரை பணிநீக்கம் செய்து அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஒருவர், தான் வெகு காலமாக மாநில அரசுப்பணியில் இருப்பதாகவும், பல ஆண்டுகள் கழித்து தனது சாதிச்சான்றிதழ் போலி எனக் கண்டறியப்பட்டுள்ளதால் தன்னுடைய வேலை பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்றும், இருபது ஆண்டுகளுக்கு மேல் தான் பணிபுரிந்ததால் தன்னை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, மராட்டிய மாநில அரசின் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மராட்டிய மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல. போலியான சாதிச்சான்றிதழ் மூலம் கல்விச்சேர்க்கை அல்லது பணியில் சேர்ந்திருந்தால் அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவர் போலியான சாதிச்சான்றிதழ் மூலம் அந்தப் பணியை பெற்றது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக கல்வித்தகுதியை ரத்து செய்து அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும். இந்த உத்தரவு மறுபரிசீலனைக்கு உரியது அல்ல. உடனடியாக அமலுக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் போலியான சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.

மேலும் அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அலுவலகங்கள் இதுகுறித்த தகவல்களை சேகரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com