தெலுங்கானா சுரங்க விபத்து: தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு


தெலுங்கானா சுரங்க விபத்து:  தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 March 2025 3:14 AM IST (Updated: 10 March 2025 4:01 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் சுரங்க மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

நாகர்கர்னூல்,

தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் தோமலபென்டா பகுதியருகே அமைந்த சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, கடந்த பிப்ரவரி 22-ந்தேதி திடீரென மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் தப்பியபோதும், 8 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 14 கி.மீ. நீள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில் நுட்பம் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்தது.

கேரளாவில் இருந்து மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 வார கால மீட்பு பணியில் 11 தேசிய அளவிலான மீட்பு குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இயந்திரத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டு உள்ளது. எனினும், அவருடைய கை மட்டுமே வெளியே தெரிகிறது. அவர் குர்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்து உள்ளார்.

1 More update

Next Story