ஜோஷிமத் நகரத்தை தொடர்ந்து அண்டை பகுதிகளும், பூமிக்குள் புதையும் அபாயம்...!

ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் முழுப் பகுதியும் மெல்ல மெல்ல மூழ்குவதைக் காட்டுகின்றன.
ஜோஷிமத் நகரத்தை தொடர்ந்து அண்டை பகுதிகளும், பூமிக்குள் புதையும் அபாயம்...!
Published on

டேராடூன்,

இயற்கை எழில் கொஞ்சும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த நகரத்துக்கு பெரும் சோதனை வந்திருக்கிறது. இந்த நகரம், நில வெடிப்புகளாலும், நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருகிறது. இங்குள்ள 4,500 கட்டிடங்களில் 610 கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை வாழத்தகுதியற்றவையாக மாறி இருக்கின்றன.

அந்த கட்டிடங்களில் வாழ்கிறவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் முழுப் பகுதியும் மெதுவாக மூழ்குவதைக் காட்டுகின்றன. சிவப்பு புள்ளிகள் மூழ்கும் பகுதிகளைக் குறிக்கின்றன. அவை ஜோஷிமத் நகரத்தில் மட்டும் அல்லாமல் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியுள்ளன, தரவு காட்டுகிறது. ஜோஷிமத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆண்டுக்கு 6.5 செ.மீ அல்லது 2.5 இன்ச் என்ற விகிதத்தில் மூழ்கி வருவதாக இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் நடத்திய 2 வருட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டேராடூனை தளமாகக் கொண்ட நிறுவனம் இப்பகுதியின் செயற்கைக்கோள் தரவைப் வெளியிட்டுள்ளது.

ஜோஷிமத்தில் உள்ள 110 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் முழு நகரத்தையும் காலி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரின் பல பகுதிகள் புதைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தின் அலிகாரில் விரிசல் ஏற்பட தெடங்கியுள்ளது. பல வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com