நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பதாக சொல்வது கட்டுக்கதை: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வதாக கூறுவது கட்டுக்கதை. மத்திய சட்ட அமைச்சகம் உள்பட பலர் சேர்ந்து முடிவு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பதாக சொல்வது கட்டுக்கதை: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
Published on

நீதிபதிகள் மீது தாக்குதல்கள்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா சட்ட கல்லூரியில், இந்திய நீதித்துறையின் எதிர்கால சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

சமீபகாலமாக நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தீர்ப்பு சாதகமாக வராவிட்டால், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாக நீதிபதிகளுக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது.

கோர்ட்டுகள் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்காவிட்டால், இவற்றுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

கட்டுக்கதை

சமீபகாலமாக ஒரு சொற்றொடர் பிரபலமாகி வருகிறது. அதாவது, நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்து கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இது ஒரு கட்டுக்கதை.

ஏனென்றால், மத்திய சட்ட அமைச்சகம், உளவுத்துறை, மாநில அரசுகள், கவர்னர், சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாக தலைமை என பல்வேறு தரப்பினர் சேர்ந்து முடிவு செய்கிறார்கள். ஆனால், விபரம் அறிந்தவர்கள் கூட இந்த கட்டுக்கதையை பரப்பி வருகிறார்கள்.

மத்திய அரசு நிறைய நீதிபதிகளை நியமிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சில ஐகோர்ட்டுகளின் பரிந்துரைகளை இன்னும் மத்திய சட்ட அமைச்சகம் எங்களுக்கு அனுப்பவில்லை. உரிய நேரத்தில் இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

அரசு வக்கீல்களுக்கு சுதந்திரம்

அரசு வக்கீல்கள், மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. அதனால்தான், அற்பமான வழக்குகளை கோர்ட்டுக்கு வராமல் அவர்களால் தடுக்க முடியவில்லை.

அரசு வக்கீல்களை, அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்களை சுதந்திரமான ஒரு குழு தேர்வு செய்ய வேண்டும்.

சட்டம் இயற்றும்போது, அதன் பின்விளைவுகளை பற்றி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து விடும். உதாரணத்துக்கு, பீகார் மதுவிலக்கு சட்டத்தால் கோர்ட்டுகளில் ஜாமீன் வழக்குகள் குவிந்து விட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com