பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவு

கோலார் தங்கவயலில் பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவு
Published on

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மகாத்மா காந்தி பிறந்தநாள்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று காலையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் சிவில் கோர்ட்டு நீதிபதி மஞ்சுநாத், தாலுகா கோர்ட்டு முதன்மை நீதிபதி வினோத் குமார் ஆகியோர் நேற்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராபர்ட்சன்பேட்டை நகரசபை எதிரே உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென ஆய்வு பணி மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த நகரசபை கமிஷனர் பவன் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

மதுபாட்டில்கள்

மைதானத்தில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் வீசப்பட்டு கிடந்தன. மேலும் குப்பை கழிவுகளும் குவிந்து கிடந்தது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'விளையாட்டு மைதானத்தில் வயதானவர்கள், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். அந்த நேரத்தில் சமூக விரோதிகள் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு மது குடிப்பதும், கண்ட இடங்களில் மது பாட்டில்களை வீசி விட்டு செல்வதுமாக இருந்தால் என்ன நியாயம்' என்று கேள்வி எழுப்பினர். அப்போது நகரசபை கமிஷனர் பவன்குமார் தனது கண்களில் தென்பட்ட மதுபாட்டில்களை ஊழியர்கள் மூலம் சேகரித்தார். பின்னர் அவற்றை நீதிபதிகளிடம் காட்டினார்.

போலீசாருக்கு உத்தரவு

பின்னர் நீதிபதிகள் உடனே இதுபற்றி போலீசாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பெசினர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது நீதிபதிகள், 'மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விளையாட்டு மைதானத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். பொது இடங்களில் மது அருந்துபவர்களை பார்த்தால் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்' என்று கூறி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com